குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வேலூர் வருவதை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் அருகே ஸ்ரீபுரத்தில் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயில் உள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மன், விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாளை தரிசனம் செய்வதுடன், ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார்.
பின்னர், தங்கக்கோயில் அருகே ஸ்ரீநாராயணி ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில், 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்துவைக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவருடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வேலூர் வருகின்றனர். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 700 போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

























