போதைப்பொருள் கடத்தல் கும்பலை மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கட்டுப்படுத்தி வருவதுடன், அதிகளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிரமாகச் செயலாற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு டெல்லியில், 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதுடன், இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பில் ஒரு திருப்புமுனை எட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எட்டுவதற்கு முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரை தாம் பாராட்டுவதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.


























