தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மலேசியாவின் மலாக்கா நீரினை பகுதியில் உருவான சென்யார் புயல், தமிழகம் நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தோனேஷியாவில் கரையை கடந்தது. இந்நிலையில், இலங்கை அருகே குமரிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வலுப்பெற்றபின் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணிநேரத்தில் புயலாக வலுவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்பகுதிகளை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் 28-ம் தேதி முதல் 30ம் தேதி வரை காவிரி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
























