மேற்காசிய நாடான இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார். இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.
இதனிடையே, வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாக நெதன்யாகு கூறியிருந்தார். இந்நிலையில், தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டப்படி பரிசீலிப்பதாக அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவதற்கு சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


























