சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து, தாம் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரையும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் பெரியகருப்பனையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைவதாகவும், ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
























