தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது, தாம் தெரிவித்த வாக்கு திருட்டு தொடர்பான சவாலுக்கு அமித்ஷா நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, அவர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்றைய விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பான தமது குற்றச்சாட்டுக்கு அமித்ஷா நேரடியாகப் பதிலளிக்கவோ, ஆதாரங்களை வெளியிடவோ இல்லை என்று கூறினார். தாம் தெரிவித்த குற்றச்சாட்டுகளால் அமித்ஷா, மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமித்ஷாவின் தடுமாற்றத்தை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நேரலையில் பார்த்தனர். தாம் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் வரவில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

























