ஈரோடு மாவட்டம் மூங்கில் பாளையத்தில், நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்நிலையில், த.வெ.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தொண்டர்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டங்களிலும் காவல்துறையின் அறிவுறுத்தல் படி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சிக்கு விஜய் வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போதும், அவரது வாகனத்தை இரு சக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வதை, அறவே தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே தொண்டர்கள் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் த.வெ.க சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

























