தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், கட்டுமான பணிகள், கட்டிடங்களை இடிப்பது, பழைய கார் உபயோகம் ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காற்று சுத்திகரிப்பான்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், அவற்றின் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி-யை குறைக்க உத்தரவிடக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் மோகன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி தேவேந்திர உபத்யாயா தலைமையிலான அமர்வு, ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 21 ஆயிரம் முறை காற்றை சுவாசிப்பதாக குறிப்பிட்டனர். சுத்தமான காற்றை வழங்க வேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்ட மத்திய அரசு, காற்று சுத்திகரிப்பான் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி வசூலிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
காற்று சுத்திகரிப்பான் மீதான ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாக குறைக்கவும், அதனை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவும் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

























