சென்னை தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற தூய்மை பணியாளர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், இன்று காலை பாரிமுனை குறளகம் அருகே திரண்ட தூய்மை பணியாளர்கள் சிலர், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

























