தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை, 6 புள்ளி 41 கோடியில் இருந்து, 5 புள்ளி 43 கோடியாக குறைந்துள்ளது. இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என, 97 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, புதிய விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை, ஒரு லட்சத்து 83 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள, 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இன்றும், நாளையும், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பெயர் சேர்க்க விரும்புவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதேபோல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் மற்றும் இடமாறுதலுக்கும் விண்ணப்பம் அளிக்கலாம்.
























