தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் மேடை போட்டு வாசிக்கத் தயாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓப்பன் சேலஞ்ச் விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஸ்டாலின் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே, தனது தலைமையிலான ஆட்சியில் தான், உருவானது என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95 சதவீத வேலையாகக் கொண்ட முதலமைச்சர், 5 சதவீத திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, அவர் நடத்திய போட்டோ ஷூட்களின் பட்டியல் என விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இதேபோல், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? என்றும் சவால் விடுத்துள்ளார்.

























