அரசு மருத்துவமனைக்கு மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட ஊழல் முறைகேடு வழக்கில் அப்போதைய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு தொடர்பு இருப்பதால் அவரது பதவியைப் பறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வலியுறுத்தி உள்ளார்
இது தொடர்பாக காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் எம்பி…
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக அப்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இரண்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணராவிற்கும் சம்மந்தம் இருக்கிறது, எனவே அவர் வகிக்கும் புதுச்சேரி அரசுக்கான டெல்லி மேலிட சிறப்பு பிரதிநிதி என்ற பதவி பறித்து அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அரசு கொறடா ஆனந்த ராமன்…
தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்து ஒரு நான்கு மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் சிறப்பு வாக்காளர் திருத்த பணி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்காக புதுச்சேரி மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள், பிஜேபி-என் ஆர் காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், இதை உணர்ந்த பிஜேபி வரும் தேர்தலில் குளறுபடி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வட மாநிலங்களில் எப்படி வாக்குத்திருட்டு நடைபெற்றதோ அதேபோன்று தமிழகம் புதுச்சேரியில் வாக்குத்திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற தேர்தல் ஆணையமும் பிஜேபியும் கைகோர்த்துக்கொண்டு களம் இறங்கி உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

























