தாம்பரம் அருகே தபால் நிலையம் மட்டுமல்லாது, கடை மற்றும் வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கத்தில், தபால் நிலையம் இயங்கி வருகிறது. இன்று காலை அலுவலகத்திற்கு, ஊழியர்கள் வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் 8 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. இதேபோல், மாடம்பாக்கம் பெரியார் நகரில் லோகேஷ் என்பவரது வீட்டில், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்கள் திருடுபோனது.
அருகே உள்ள மளிகை கடையில், 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
























