சேலத்தில் வரும் 4ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜயிடம், நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சேலம் காவல் ஆணையரிடம் வரும் 4ஆம் தேதி விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிகோரி, தவெகவினர் மனு அளித்தனர். பிரச்சாரத்திற்காக போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களையும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திகை தீப பணிகள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட காவல்துறையினர், அனுமதி மறுத்ததாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

























