சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
2006-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், அடுத்து வந்த 2011 தேர்தலில் 63 தொகுதிகளில் களம் இறங்கியது.
2016-ல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்த சமயத்தில், 41 தொகுதிகளைக் கேட்டுப்பெற்றார். ஆனால், வெறும் எட்டுத் தொகுதிகளில்தான், காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது.
அதையே காரணமாக வைத்து, அடுத்து வந்த 2021 தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்கியது. அவற்றில், 18 தொகுதிகளில் வென்றிருக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் கூடுதல் சீட்டுகளை எதிர்பார்க்கிறது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, 5 பேர் குழுவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையிலான இந்தக் குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்த காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

























