10வது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் இதற்கு தகுதிபெற்றுள்ளன. இத்தாலி அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 4 பிரிவுகளாக 20 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில், முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 8 சுற்றின் முடிவில், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி, உலகக் கோப்பை தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா அணி யு.எஸ்.ஏ அணியை, மும்பையில் எதிர்கொள்கிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, பிப்ரவரி 15ஆம் தேதி, கொழும்புவில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


























