நாடு முழுதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இறந்தவர்களின் ஆதார் கார்டை செயலிழக்கச் செய்யும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஆதார் தரவு தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தை உறுதிசெய்ய பல்வேறு ஆதாரங்களில் இருந்து இறப்பு பதிவுகளைப் பெறவும், உரிய சரிபார்ப்புக்குப் பின் தொடர்புடைய ஆதார் எண்களை செயலிழக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து இறப்பு பதிவுகளை பெற்று இதுவரை 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் உறுப்பினர்களின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ஆதார் போர்ட்டலில் புதிய சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
























