மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து, ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தேவையற்றது என்றார். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைக்காக, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

























