நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த முன் வர வேண்டும் என்று கூறினார்.
மக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்து பிரதிநிதிகளாக அனுப்பியுள்ள இரு அவைகளிலும் மக்களுக்கான திட்டங்களை விவாதிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த காலங்களில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவாதங்களை நடத்த அனுமதிக்காமல் இடையூறு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறிய பிரதமர், இந்தக் கூட்டத்தொடர், நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன தேவை என்பதை ஆலோசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றம் தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மோடி கூறினார். அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் ஜனநாயகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தாகவும், இந்தியா எப்போதுமே ஜனநாயக நாடு என்றும் பிரதமர் கூறினார்.

























