நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நோய் கண்டறியப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார். இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழி காட்டுதல்களை வழங்கிட போதுமான அளவிற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள், தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

























