விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை, உடனடியாக வடிய வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வருவாய்த் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து, டிசம்பர் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் விதைகள், உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு
விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும்,
வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத்துருவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு உரிய படிவத்தில், அரசுக்கு உடனுக்குடன் அனுப்பிட வேண்டும் என்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

























