சென்னையில் காலமான திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமான ஏ.வி.எம்.சரவணன் உடல் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சரவணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அமைதியும், எளிமையுமே பண்பு நலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏ.வி.எம் சரவணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோன்று நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, விஷால், விக்ரம் பிரபு, பாக்யராஜ், பார்த்திபன், ஜீவா, கருணாஸ், ஆனந்த்ராஜ், மோகன், நடிகை கே.ஆர்.விஜயா உள்ளிட்டோரும் ஏ.வி.எம்.சரவணின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர், பி.வாசு, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.பி.முத்துராமன், வசந்த், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட திரையுலகினரும் சரவணின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
























