பிஜேபி அரசின் தூண்டுதலின் பேரில், அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ, அதிமுக-பிஜேபி கூட்டணியினரின் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில், அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு தன்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக- பிஜேபி கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை திராவிட மாடல் அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக பிஜேபியினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். பிஜேபி அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள்.
தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பிஜேபியின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது என்றும் நேரு விமர்சித்துள்ளார். தனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் “சாதனை- சாதனை- சாதனை” என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே பிஜேபி அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கே.என்.நேரு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

























