எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்தபடி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைப்பு ரீதியாக 82 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதை உறுதிசெய்ய எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். வாக்குச்சாவடி முகவர்கள் பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட செயலாளர்களையும், பொறுப்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதால், அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முறையாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

























