தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை அவருடைய பனையூர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்தித்து, அக்கட்சியின் இணைந்தார். செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளனர்.
1996-ம் ஆண்டு தவிர்த்து, அனைத்து சட்டசபைத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏ-வாகப் பணியாற்றியவர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதால், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், செங்கோட்டையன் நேற்று சென்னை பட்டினப்பாக்கில் உள்ள விஜய்-ன் வீட்டிற்குச் சென்று, அவருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களும் த.வெ.க-வில் இணைந்தனர்.
அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஏற்கெனவே அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கி தேர்தல்களின் போட்டியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறினார்.
























