திருவண்ணாமலை அருகே நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற அரசு விழாவில், 2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.
தோட்டக்கலைத்துறை சார்பில், திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில், வேளாண் அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அப்போது, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகள் பயனடைந்தால்தான், நாட்டின் உண்மையான வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு கனமழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு, விரைவில் நிவரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் தெரிவித்தார்.

























