தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல மாநிலங்களில் இன்னும் எஸ்.ஐ.ஆர் பாணிகள் பாதிகூட முடியவில்லை. ஆனால், டிசம்பர் நான்காம் தேதிக்கு பிறகு, படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படாது என, தேர்தல் ஆணையம் கூறுகிறது. நியாயமான விஷயங்களை சொன்னால்கூட, அதை அரசியலுடன் கலந்துபேசுவதை தேர்தல் ஆணையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தயாராக இல்லை என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு தொடர்புடைய வழக்குகள், விசாரணையை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவான அதிமுகவின் மனுவை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது, பிரதான வழக்கில் எதிர் மனுதாரர்களின் வாதங்கள் நிறைவடைந்த பிறகு, ஆதரவாளர்களும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தள்ளிவைக்குமாறு, அம்மாநில அரசு தொடர்ந்துள்ள வழக்கில், கேரள மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
























