புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பாதிப்புக்குள்ளாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.
டிட்வா புயலை எதிர்கொள்ளவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழிலகத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மிக கனமழை பெய்யும் பட்சத்தில், மீட்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று, அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

























