கோவையில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவில், முதல் கட்டமாக 45 ஏக்கரில் 208 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், நவீன உடற்பயிற்சிக்கூடம், செம்மொழி வனம், மகரந்தத் தோட்டம், உணவகம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவுவாயில் என, பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பூங்காவை முதலமைச்சர் சுற்றிப் பார்த்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
























