புயல் மழையால் டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இலங்கை அருகே உருவான டிட்வா புயலால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்திருக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நடவு செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. தண்ணீர் வடியாத பட்சத்தில் பயிர்கள் அழுகிவிடும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ள நெற்பயிர் நீரில் மூழ்கியதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசுத் துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

























