டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் எதிரொலியாக, டெல்டா மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக கூறினார். கனமழை காரணமாக 85 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும், 27 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் 56 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள், மழைநீரில் மூழ்கி இருப்பதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

























