டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜசீர் பிலால் வானியை 10 நாள் தேசிய புலனாய்வு அமைப்புக் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே உமர் உன் நபி என்பவர் காரை ஓட்டி வந்து வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உமருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவியதாக காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜசீர் பிலால் வானியை ஸ்ரீநகரில் காவல்துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்புச் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டியதில் ஜசீர் பிலால் வானி முக்கிய பங்கு வகித்ததாகவும், உமருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியதாகவும் என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஏற்ப ஜசீர் பிலால் வானி டிரோன்களில் மாற்றங்களை செய்து வழங்கியதாகவும் என்.ஐ.ஏ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஜசீர் பிலால் வானி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா ஜசீர் பிலால் வானியை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
























