டெல்லி செங்கோட்டை அருகே ஹூண்டாய் ஐ-20 காரை ஓட்டி வந்தது, டாக்டர் உமர் உன் நபி-தான் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 4 நகரங்களில் கார் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த 10-ம் தேதியன்று கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் உன் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. உமர் நபி-க்கு ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், லக்னோ அருகே ஃபரிதாபாத்திலும், தெற்கு காஷ்மீரிலும் இருந்து செயல்பட்டு வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உமர் நபியுடன் தொடர்பில் இருந்த 6 டாக்டர்கள் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டெல்லி உள்பட 4 நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்காக 20 லட்சம் ரூபாய் நிதி திரட்டியதுடன், 3 லட்சம் ரூபாக்கு வெடிமருந்துப் பொருள் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, உமர் நபியின் மூன்றாவது காரை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் கார் வெடித்துச் சிதறுவதற்கு முன்பாக, உமர் நபி, அங்குள்ள மசூதிக்கு வெளியே நிற்பது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


























