திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும், மருந்து விற்பனை பிரதிநிதியான முருக பக்தர் பூர்ணசந்திரன் என்பவர், நேற்று மாலை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மீட்ட போலீசார், மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பூர்ண சந்திரன் மறைவுக்கு, முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை, பூர்ண சந்திரன் உடலுக்கு பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலதலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பூர்ண சந்திரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த நயினார் நாகேந்திரன், பிஜேபி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு, தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவராணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

























