எஸ்.ஐ.ஆர் குறித்து தமிழ்நாடே புலம்பிக் கொண்டிருக்கும் போது, அதை ஆதரித்து அதிமுக உச்சநீதிமன்றம் சென்றிருப்பது வெட்க கேடானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். அப்போது, மக்கள் ஒவ்வொருவரும் இந்திய குடிமக்கள் தான் என்று நீருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட பெரும் சுமையை மக்கள் மீது சுமத்தியிருப்பதாக குறிப்பிட்ட அவர், வாக்குரிமையே பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
விசாரணை அமைப்புகளை வைத்து பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு, இன்னல்களையும், துன்பங்களையும் தந்து கொண்டிருப்பது போல,தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி, இத்தகைய நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கேரளாவில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது எதிர்கட்சியாக செயல்படவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

























