ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும், 1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி, பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, அவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு தகுதி தேர்வை நடத்த முடிவு செய்த தமிழக அரசு, ஜனவரி மாதம் நடைபெறும் தேர்விற்கான அட்டவணையை, இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால், அன்றைய தினமே அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அன்பில் மகேஷ் இன்று சந்தித்து பேசினார். மூத்த வழக்கறிஞரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் அப்போது உடன் இருந்தார்.
























