பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இந்தியா – பிரேசில்- தென்ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒற்றுமையாகப் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
உலக நாடுகளுக்கு நன்மை ஏற்படுவதற்கு, ஜி-20 உறுப்பு நாடுகள் கூட்டாக மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருதை சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதம் போன்ற கடுமையான பிரச்சினைகள் வரும்போது இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்பதையும் உலக நாடுகளுக்கு நினைவூட்டினார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுரங்கம், முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதித்தார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா-சில்வா-வையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுகள் நடத்தினார். பல்வேறு துறைகளில் இந்தியாவும், பிரேசிலும் கூட்டாக செயல்படுவது குறித்து அப்போது அவர் விவாதித்தார்.


























