வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழையும், நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. அடுத்த ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது. புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் இன்று இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு
கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 16, 17-ம் தேதிகளில் டெல்டா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ராமேஸ்வரம் அருகே, கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் படகுகள் ஒன்று கொன்று மோதி, சேதம் ஏற்படுகிறது. இதனால், மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

























