தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்டு. புதிய நிர்வாகிகள் 2019-ல் பதவியேற்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வரதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 16 மாநிலங்களின் பார் கவுன்சிலைச் சேர்ந்தவர்களும் தங்களை மனுதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வு, 2026 ஜனவரி 31-ம் தேதிக்குள், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் உள்ளிட்ட 16 பார் கவுன்சில் தேர்தல்களையும் நடத்தி முடிக்க ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வந்தபோது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கோரினார்.
அதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், 16 மாநிலங்களிலும், அடுத்தாண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் 4 பிரிவுகளாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழ்நாடு-புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களின் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை அடுத்தாண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். தேர்தல் நடத்தி முடித்த ஆறு நாட்களுக்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

























