அங்கோலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று போட்ஸ்வானா சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, தலைநகர் கேபரோனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
கேபரோன் விமான நிலையத்தில் போட்ஸ்வானா அதிபர் டுமா போக்கோ நேரில் வந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்றார். பின்னர், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவுக்கு சென்றுள்ள முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, போட்ஸ்வானா அதிபர் டுமா போகோ-வுடன் இன்று, திரவுபதி முர்மு பேச்சு நடத்துகிறார். இந்தியா-போட்ஸ்வானா இடையே புதிய துறைகளில் நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
























