சென்னை சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை, மழை தொடர்கிறது. தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், ஜி.என்.செட்டி சாலை மற்றும் கோடம்பாக்கம் பகுதியில், பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பிரதான சாலையிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தியாகராயநகர் பசுல்லா சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தண்ணீரில் தத்தளித்தபடி செல்லும் நிலை காணப்படுகிறது. சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதியிலும் விட்டு விட்டு மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை படாளம் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் காணப்படுகிறது. மழைநீரை வெளியேற்றும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், மழை தொடர்வதால், இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

























