70 வயதான மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையில் இன்று தொடங்கிவைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில், 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள 2 ஆயிரம் தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டும் என சட்டப்பேரவையில் அத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர் உதயநிதி, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்புச் செய்தார்.
அதன்படி, தம்பதியினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான வேஷ்டி. புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அவர் வழங்கினார். அப்போது, தம்பதியினர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட ஆதினங்கள் பலர் கலந்து கொண்டனர்.

























