வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே, மத்திய அரசு முடக்க பார்ப்பதாக, அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற மத்திய அரசின் திருத்தங்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல் என, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரையே இருட்டடிப்பு செய்யச் சதி நடக்கிறது. 100 நாள் வேலையை 125 நாட்களாக அதிகரிக்கிறோம் என்பதை, ஊடக தலைப்புச் செய்திக்காக செய்துவிட்டு, வேலை பெறுவதை, சட்டப்பூர்வமாக்கும் மக்களின் உரிமையையே பறிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, உரிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும், மத்திய அரசு, இந்தத் திட்டத்துக்கான பெரும்பகுதி நிதியை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டுத், தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும், இல்லையெனில் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

























