கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மீண்டும் பரிசீலனை செய்து, இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த, பிரதமர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு, பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டு, நாட்டிலேயே மிகவும்
நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும், தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், அனைத்து வகையிலும், பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், மதுரை மற்றும் கோவை நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டம் தேவை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை உள்ளூர் திட்டப் பகுதியின்படி, அதன் மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டிலேயே, 20 இலட்சத்தைத் தாண்டியிருந்தது. மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட, அதிகமாக இருக்கும் என்றும், முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 20 இலட்சம் என்ற அளவுகோல், ஒரே மாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்பதையும், முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளுக்குச் சுட்டிக்காட்டுவது என்பது, இந்த நகரங்களுக்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது.
எனவே, மத்திய அரசு மற்ற மாநிலங்களில் மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினைப் போன்று, தமிழ்நாட்டிலும் இந்த அளவுகோலை நீக்க வேண்டுமென்று, பிரதமரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மற்றும் மதுரை நகரங்களில், முன்மொழியப்பட்ட மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு, நிலம் கிடைப்பது என்பது, ஒரு தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும், முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

























