தமிழகத்தில் பீகாரிகள் உள்ளிட்ட பிற மாநில மக்கள் அச்சுறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது உண்மையல்ல என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலகாலம் பேசாமல் இருந்த ஆளுநர் ரவி தேர்தல் வருவதால், மீண்டும் தமிழக மக்களுக்கு எதிராகப் பேசிவருவதாக குற்றம்சாட்டினார். தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளைப் பேசும் மக்களும், தமிழக மக்களுடன் சகோதரர்களாக பழகி வருவதாக ரகுபதி தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் கூறுவதுபோல தமிழகம் தனித்து நிற்கவில்லை என்றும் பிரிவினை பேசவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார். இந்தியாவுடன் ஒற்றுமையாக இருப்பதே வளம் என்றுகூறி மத்திய அரசுக்கு துணையான தீர்மானங்களை தாங்கள் நிறைவேற்றியதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு தான் வைத்துள்ளதே தவிர, பாராட்டுத் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

























