சேலம் அருகே கோயில் உண்டியலில் இருந்த தங்க நகைகள், குப்பை தொட்டியில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாகுடி முனியப்பன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் உண்டியல்களில், நேற்று மாலை திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சேர்ந்த சங்கர் காணிக்கை என்ணும் பணியில் ஈடுபட்டார். பணத்தை எண்ணி முடித்த நிலையில் ஒரு தங்க நாணயம் காணவில்லை என காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் கோயில் வளாகம் முழுக்க சோதனை செய்தனர். அப்போது, கோயிலில் இருந்த குப்பைத் தொட்டியில் காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க நாணயம் மற்றும் இரண்டு தாலி, ஒரு மோதிரம், இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

























