தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து- கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. அண்மையில் தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்தனர். இதையடுத்து, இரு நாடுகள் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்திவைப்பதாக தாய்லாந்து அறிவித்தது. இதனிடையே, கடந்தவாரம் தாய்லாந்து- கம்போடியா எல்லையில் நடந்த, துப்பாக்கிச் சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் எட்டு வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, கம்போடியாவுக்கு பதிலடி கொடுக்க, அந்நாட்டின் ராணுவ இலக்குகளை குறிவைத்து, தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடு களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


























