கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், குடியிருப்பதற்கு வீடு உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் உயிரிழந்த கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்யக்கூட வசதி இ¢ல்லாததால், அவரது நான்கு குழந்தைகளும் வீடு வீடாக சென்று பண உதவி கோரினர். இது பற்றிய செய்தி வெளியானதும், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின். அரசின் சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி, மறைந்த கமலக்கண்ணனின் பிள்ளைகள் 4 பேரையும் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்திருந்தார். அப்போது, மகள் லாவண்யாவிடம், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுதவற்கான ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மகள் ரிஷிகா மற்றும் மகன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மற்றொரு மகள் ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆகியவற்றையும் ஸ்டாலின் வழங்கினார்.

























