மேலூர் அருகே காவலர் ஒருவர் மதுபானம் கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் காவல்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போது, மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர் மேலூர் அருகே நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த பாண்டிக்குமார் என்பதும், இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து, பாண்டிக்குமாரை கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர், அவரிடமிருந்து 80 மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

























