16 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமர குருபரன் வெளியிட்டார்.
அதன்படி, எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பாக 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை இப்போது 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்காகும்.
இதற்கு அடுத்த படியாக கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 556 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், எஸ்.ஐ.ஆருக்கு முன்பு 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 ஆக இருந்த வாக்களர்கள் எண்ணிக்கை, இப்போது 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 ஆக குறைந்துள்ளது என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இருந்த 24 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் நீக்கப்பட்டு தற்போது, 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணவரே தெரிவித்தார். நீக்கப்பட்டவர்கள் மொத்த வாக்காளர்களில் 23 சதவீதமாகும்.
சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். அதன்படி, 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 வாக்காளர்கள் நீக்கப்பட்டு தற்போது 26 லட்சத்து 68 ஆயிரத்து 108 பேர் இருப்பதாக அவர் கூறினார். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் ஜனவரி 18ம் தேதி வரை ஆன்லைன் மூலமும், பிஎல்ஓக்கள் மூலம் விண்ணப்பிக்கலாம், இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார். முன்னதாக 14 லட்சத்து 18 ஆயிரத்து 325 வாக்காளர்கள் இருந்த நிலையில், தீவிர திருத்தத்திற்கு பிறகு, 12 லட்சத்து 3 ஆயிரத்து 328 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 19 ஆயிரம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்கள் விவரம். திண்டுக்கல்- 3 லட்சத்து 20 ஆயிரம். சேலம்-3 லட்சத்து 62 ஆயிரம், நெல்லை- 2 லட்சத்து 15 ஆயிரம், திருச்சி- 3 லட்சத்து 31 ஆயிரம், விழுப்புரம்- 1 லட்சத்து 82 ஆயிரம், கரூர்- 79 ஆயிரத்து 690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

























